இயற்கை கொடுத்துள்ள மூலிகைகள் ஏராளம். இதை சரியானபடி அறிந்து, தெரிந்து கொண்டால் அதுவே உடலை அழகுப்படுத்த போதும்.
உடலை அழகு படுத்த உபயோகப் படுத்தும் சில இயற்கை மூலிகைகளை பார்ப்போம்.
நெல்லிக்காயில் அதிகளவு வைட்டமின் சி உள்ளது. இதனால் நீளமான அடர்ந்த கூந்தலை பெற முடியும். இதை கொண்டு பொடுகு மற்றும் இதர முடி சம்பந்தமான பிரச்னைகளை நீக்க முடியும். இந்த வகை எண்ணெயை வாங்கி பயன்படுத்தும்போது தலைமுடிகளில் சிறந்த மாற்றங்களை காண முடியும் என்பதை மறுக்க முடியாது.
இயற்கையின் அடுத்த அழகுசாதனம் என்றே கடலை மாவை கூறலாம். முகத்தில் உள்ள இறந்த திசுக்களை உரித்து எடுக்க இந்திய பெண்கள் பயன்படுத்தும் மிக முக்கியமான அழகு சாதனம் கடலைமாவுதான்.
முடியில் உள்ள எண்ணெயை எடுக்கவும் உபயோகப்படுகின்றது. இதை பால் அல்லது கிரீம் ஆகியவற்றில் கலந்து சோப் போல் பயன்படுத்தலாம். இந்த பால் மற்றும் கிரீம் சருமத்தை ஈரப்பதமூட்டி மென்மையாக்குகிறது. இதில் தேன் மற்றும் பால் ஆகியவற்றை கலந்து பேஸ் பேக்காகவும் பயன்படுத்தலாம். இதனால் முகம் பளிச்சென்றும், மிருதுவாகவும் மாற்றம் அடையும்.
இந்திய மசாலாக்களில் மிகச் சிறந்த மசாலா வாசனைப் பொருள் மஞ்சள். ஆனால் இது சிறந்த கிருமி நாசினிகளில் ஒன்றாகும். சரும படை, தேமல், தொற்று மற்றும் எரிச்சல் ஆகியவற்றை குணப்படுத்த நம் முன்னோர்கள் அதிகளவில் மஞ்சளைதான் பயன்படுத்தி உள்ளனர்.
சருமத்தில் ஏற்பட்ட கருமையை நீக்குவதற்கும் இதை பயன்படுத்துகின்றனர். அது மட்டுமில்லாமல் முகத்தில் வளரும் முடியை நீக்குவதற்கும் மஞ்சளை தினசரி பயன்படுத்தலாம்.
குங்குமப்பூ காஷ்மீரில் அதிகளவு விளைகிறது. இதை வறண்ட சருமம் மற்றும் இதர சரும பிரச்சனைகளுக்கு பயன்படுத்தலாம். அது மட்டுமில்லாமல் சரும நிறத்தை மேம்படுத்தி நல்ல வெளிர் நிறத்திற்கு தோலை கொண்டு வரவும் உதவுகிறது.
புதிதாக மலர்ந்த ரோஜா இதழ்களை கொண்டு உருவாக்கப்பட்ட ரோஸ் தண்ணீரை பயன்படுத்தி கரு வளையங்களை போக்கலாம். இதை பல பெண்கள் அழுக்கு மற்றும் எண்ணெய் பசையை முகத்திலிருந்து நீக்க பயன்படுத்துகிறார்கள். இவை நம்மை அழகுப்படுத்தி கொள்ள இயற்கை கொடுத்த வரப்பிரசாதம்.

0 Comments
கருத்துரையிடுக