கனடாவில் போப் பிரான்சிஸ் ஐந்து நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். முதல் நாளான நேற்று முன்தினம் அல்பெர்டாவில் உள்ள மாஸ்காவசிஸ் நகரில் போப் பிரான்சிஸ் பேசினார்.

அப்போது அவர், 'நான் மிகவும் வருந்துகிறேன். பூர்வீக பழங்குடியின மக்களுக்கு எதிராக கலாசார இன அழிவு மற்றும் அவர்களுக்கு எதிரான கொடூர தீமைகளை தேவாலய உறுப்பினர்கள் நடத்தியதற்காக மன்னிப்பை கேட்டுக் கொள்கிறேன்,' என்றார்.

19ம் நூற்றாண்டில் கத்தோலிக்க தேவாலயங்களால் நடத்தப்பட்ட கொடுமைகளுக்காக தற்போதுள்ள போப் பிரான்சிஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று 7 ஆண்டுகளுக்கு முன் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணையம் அழைப்பு விடுத்து இருந்தது. இந்நிலையில், போப் பிரான்சிஸ் மன்னிப்பு கோரியுள்ளார். எனினும், தேவாலயங்களால் நடத்தப்பட்ட கொடூரங்களை அவர் திட்டவட்டமாக ஒப்புக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.